உங்கள் நூலை நீங்களே வெளியிட புதிய ஆன்லைன் வசதி!

ஒரு புத்தகம் எழுதி அதனை வெளியிடுவதற்கு ஏற்படும் கஷ்டங்களும் செலவுகளும் ஏராளம். வெளியீட்டு நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்கும் வர்த்தகத்திற்கும் உதவும் நூல்களையே வெளியிடுகின்றன. ஆனால் ஒரு சர்ச்சைக்குரிய நூல் அல்லது குறைந்த வாசகர்களே வாசிக்கும் கருத்தாழமிக்க புத்தகங்களை வெளியிட வெளியீட்டு நிறுவனங்கள் அவ்வளவாக முன் வருவதில்லை.இந்த கஷ்டங்களைப் போக்க கோவாவில் உள்ள சின்னமோன்டீல் பிரிண்ட் அண்ட் பப்ளிஷிங் நிறுவனம் (CinnamonTeal Print & Publishing Services) இந்தியாவில் முதல்முறையாக "பிரிண்ட் ஆன் டிமாண்ட்" (POD) என்ற ஆன்லைன் வெளியீட்டு வடிவத்தை துவங்கியுள்ளது.இதன் மூலம் எழுத்தாளர்கள் ஒரு சமயத்தில் தங்களது நூலின் ஒரு பிரதியை இதில் வெளியிடலாம். இதன் மூலம் வெளியீட்டிற்கு ஆகும் செலவுகள் தவிர்க்கப்படுவதோடு சிறிய அளவில் புத்தகங்களை எழுத்தாளர்களே வெளியிட்டுக் கொள்ளலாம்.இதற்கு நீங்கள் செய்யவேண்டியது பெரிதாக ஒன்றும் இல்லை. பூர்த்தியடைந்த உங்கள் பிரதியை இ-மெயில் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ சின்னமோன்டீல் நிறுவனத்திற்கு அனுப்பிவிட வேண்டியதுதான். வெளியீட்டிற்கு முந்தைய தொகுப்பு பணிகள் (Editing), பிழை திருத்தங்கள் (Proof Reading) தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அந்த நிறுவனமே செய்து கொடுக்கும்.நீங்கள் உங்கள் பிரதியை அனுப்பியவுடனேயே Dogearsetc.com என்ற ஆன்லைன் புத்தகக் கடையில் உங்கள் புத்தகம் விற்பனைக்கு கிடைத்து விடும்.எழுத்தாளர்களே தங்கள் புத்தகத்தின் விலையை நிர்ணயிக்கலாம். எந்த ஒரு வாசகராவது உங்கள் எழுத்துகள் பிடித்துப் போய் புத்தகத்தை கேட்டால் அவருக்கு உடனடியாக அச்சு அடிக்கப்பட்டு நன்றாக பைண்ட் செய்யப்பட்டு அனுப்பப்படும். புத்தகத்தின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமை ஆசிரியரை சார்ந்ததே.சின்னமோன்டீல்புக்ஸ்.காம் (cinnamontealbooks.com) துவங்கிய லியோனார்ட் மற்றும் கியூனீ ஆகியோர் இது குறித்து கூறுகையில், பல்வேறு மொழிகளும், பண்பாடுகளும் நிரம்பிய இந்தியாவில் குறிப்பிட்ட சிறு வட்ட வாசகர்களுக்கு சென்றடைய இந்த வெளியீட்டு நிறுவனம் பெரிதும் உதவும் என்று கூறினர்.மரபான வெளியீட்டு நிறுவனங்கள், எழுத்துக்கள் வர்த்தகமாக வேண்டும் என்று எதிர்பார்க்கும். பெரிய அளவிற்கு விற்றுத் தீர்த்தாலும், விற்பனை விலையில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே ஆசிரியருக்கு வழங்குகின்றன.இந்த இடைவெளியை சின்னமோன்டீல் போக்குவதாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார். இதுவரை இந்த வெளியீட்டு நிறுவனம் சிறப்பான வர்த்தகம் செய்து வந்துள்ளது என்று கூறிய லியோனார்ட், நாவல் போன்ற இலக்கிய புத்தகங்களை இதுவரை யாரும் கேட்கவில்லை. தற்போது என்.ஜி.ஓ மற்றும் கல்வி நிலையங்கள் சார்ந்த பத்திரிக்கைகள் மற்றும் செய்திக் கடிதங்கள் (News Letters) ஆகியவற்றிற்கான திட்டங்கள் மட்டும் முழு மூச்சுடன் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.இதுபோன்ற புதுவகை ஆன்லைன் பப்ளிஷிங் இந்தியாவிற்கு புதிது. ஆனால் வெளிநாடுகளில் லுலு.காம் (Lulu.com) இந்த வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. ஆனால் இந்தியா போன்ற பல்வேறு மொழிக் கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் சிறுபான்மையினருக்கும் சென்றடையுக்கூடிய இத்தகைய ஆன்லைன் வெளியீட்டு நிறுவனங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: