பீஜிங் ஒலிம்பிக்கில் சில தவறுகள்!


பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.

உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர் வேறு ஒருவர் என்ற உண்மை தான் அது. இது ஒலிம்பிக் ரசிகர்கள் மனதில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற ஹீ-கெக்ஸின் 16 வயது நிரம்பாதவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பீஜிங் ஒலிம்பிக் ஊக்க மருந்து பயன்பாடற்ற ஒலிம்பிக் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உக்ரைன் வீரர் ரஸோரோனோவ் (பளு தூக்குதல்) மற்றும் வீராங்கனை லுட்மிலா ப்ளோன்ஸ்கா (ஹெப்டத்லான்), கிரீஸ் வீராங்கனை ஹல்கியா (தடை ஓட்டம்), வடகொரியாவின் கிம் ஜோங்-சு (துப்பாக்கி சுடுதல்), ஸ்பெயினின் இஸபெல் மோரினோ (சைக்கிள் போட்டி), வியட்நாம் வீராங்கனை தி-கன் துவோங் (ஜிம்னாஸ்டிக்) ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள நடுவருக்கு உதை: ஆடவர் டேக்வான்டோ போட்டிகளின் போது கள நடுவரை முகத்தில் உதைத்த குற்றத்திற்காக கியூபா வீரர் ஏஞ்சல் வலோடியாவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஏஞ்சல் வாலோடியா மடோஸ், கஜகஸ்தானின் அர்மன் சில்மனொவை எதிர்த்து மோதினார். இப்போட்டியில் வாலோடியா முன்னிலையில் இருந்தாலும், கஜகஸ்தான் வீரர் வெற்றி பெற்றதாக அறிவித்து நடுவர் போட்டியை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வாலோடியா நடுவரை காலால் எட்டி உதைத்தார். இதையடுத்து வாலோடியாவுக்கும், அவரது பயிற்சியாளருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெஞ்சைத் தொட்டது: ஒலிம்பிக் போட்டி நடந்த சமயத்தில் ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கும் உக்கிர போர் மூண்டது. மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர்-பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்ற ஜார்ஜிய வீராங்கனை நினோ, வெள்ளிப் பதக்கம் வென்ற நடாலியா படெரினாவை கட்டித் தழுவி தனது நட்புணர்வை வெளிப்படுத்தியது ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது.

ஒரு சில குறைகள் இருந்தாலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சீனா மிகச் சிறப்பாக நடத்தியது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைவு விழாவில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக் ரோஜே, அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் இங்கிலாந்துக்கு விடுத்த கோரிக்கை என்னவெனில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து நடத்தி தர வேண்டும் என்பதே.

0 comments: