தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காகவே அரசு பேரினவாதிகளிடம் ஆதரவைப் பெற்றுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு !

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் நிலப் பரப்புக்களை கைப்பற்றி விட்டால் யுத்தத்துக்கு முடிவு காணலாம் என்ற மாயத் தோற்றத்திற்குப் பின்னால் சிங்களவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

இது பேரழிவுக்கு வழிவகுக்குமே தவிர யுத்தத்திற்கு முடிவினைத் தராது என்பதை பெரும்பான்மை சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இனவாதக் கருத்துக்களை பரப்பி புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழர்களை அழித்தொழிப்பதற்காகவே சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து அரசாங்கம் ஆதரவினைப் பெற்றிருக்கின்றது.

தனது குறுகிய வெற்றியின் ஊடாக நீண்ட கால வெற்றியைக் காண அரசினால் ஒருபோதும் முடியாது. எனவே அரசியல் தீர்வு எட்டப்படாத வரையில் இந்த நாட்டுக்கு நிம்மதி ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளமை குறித்து கேட்ட போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சிங்கள அரசாங்கங்களின் வரலாற்று ரீதியிலான தவறுகள் சிங்களப் பேரினவாதிகளால் இன்றுவரையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேஷமான கருத்துக்களை திணித்து தமிழரையும் சிங்களவரையும் இணையவிடாது பிரித்து வைப்பதையே பேரினவாத அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர்.

சிங்களவர்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கு அது அவர்களுக்கு தேவையாகவும் இருக்கின்றது.

அரசாங்கம் தமது ஊடகங்களில் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதாகவே பரப்புரை செய்கின்றது.

இதேபோல் ஏனைய சிங்கள ஊடகங்களும் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை எடுத்துக் கூறுவதில்லை.

வடக்கின் மீது தொடுக்கப்பட்டுள்ள போரினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் தமது வாழ்விடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலைவரங்கள் சிங்களவர்களுக்கு மூடி மறைக்கப்படுகின்றன.

0 comments: