காதல் என்பது என்ன?


காதலைப்பற்றிப் பேசாத கவிஞர்களும் குறைவு, காதல் வசப்படாத மனிதர்களும் குறைவு.

"காதல் என்பது ஒருவரின் இளமைகாலத்தில் வரக்கூடிய இனிமையான அனுபவம்" என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ "கல்யாணத்தின் பின்னர் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்புதான் உண்மையான காதல், அதுவும் கருத்தொருமித்த குடும்ப வாழ்வில் இருந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முதுமை நிலையில் இருக்க கூடிய காதலே உண்மையான, முழுமையான காதல்" என்கிறார்கள்.

"காதலுக்கு கண்ணில்லை, காதல் வரை முறையற்றது, எவராலும் காதலை கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் யார் மேலும் காதல் வரலாம்" என்கிறார்கள் சிலர். "அது எல்லாம் வெற்றுப்பேச்சு, அப்படி வருவது எல்லாம் வெறும் ஒருவர்மேல் ஒருவருக்கு வரும் ஈர்ப்பு மட்டுமே, அதை காதல் என்ற பெயாரால் நாகரீகப்படுத்தி சொல்கிறார்கள்" என்கிறார்கள் வேறு சிலர்.

"கண்ணில்லாத காதலால் குடும்பம், சமூகத்தில் பிரச்சனைகளே உருவாகும், அந்த காதல் உணர்ச்சிபூர்வமாய் இருக்காமல், அறிவு பூர்வமாய் சிந்திக்கப்பட்டு வந்தால் அது குடும்பம், சமூகத்திற்கு நன்மை தரும்" என்பது ஒரு சாராரின் வாதம். "அப்படியா, அறிவுபூர்வமாய் இருப்பது காதலே அல்ல, அது வெறும் கடமை மட்டுமே" என்பது எதிர் தரப்பினரின் வாதம். "கண்ணில்லாது ஏற்படும் காதல் என்பது வாழ்வில் பலருக்கு துன்பத்தில் முடிகிறது. அமரத்துவம் பெற்றதாய் பேசப்படும் காதல்கள் எல்லாம் துன்பத்தில் முடிந்தவையே. அப்படி இருக்கையில், வெறும் உணர்ச்சியினால் ஏற்பட்ட அப்படிப்பட்ட காதலால், தனி மனிதனுக்கோ, அல்லது சமுதாயத்துக்கோ என்ன பலன்" என்று மற்றவர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, "காதல் என்பது புனிதமான ஒன்று, அது உணர்வு சம்பத்தப்பட்டது மட்டுமே, உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமே கிடையாது" என்பவர்கள் ஒருபுறமும், "அப்படிப்பட்ட ஒன்று காதலே அல்ல, உடலும், உணர்வும் இணைந்து வருவதே காதல்" என்பவர்கள் ஒரு புறமுமாய் வாதிட்டு கொள்கிறார்கள்.

இப்படி பல முரண்பாடுகளுடன் பேசப்படும் காதல்பற்றி நிச்சயம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்களை முடிந்தால் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யுங்களேன்.

0 comments: